இலங்கையின் இறுதிப் போட்டி கனவைத் தகர்த்தது பாகிஸ்தான்
அபுதாபி: ஆசியக் கிண்ண சூப்பர் 4 சுற்றின் ‘வாழ்வா சாவா’ போட்டியில், நடப்பு சம்பியனான இலங்கை அணியை, பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் தனது இறுதிப் போட்டி வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
அபுதாபியில் நேற்று (23) நடைபெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடியின் (3/26) அபாரமான பந்துவீச்சால் ஆரம்பத்திலேயே தடுமாறியது. கமிந்து மெண்டிஸ் மாத்திரம் அரைசதம் (50) அடித்த போதிலும், இலங்கை அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
பதிலுக்கு, 134 என்ற வெற்றி இலக்கைத் துரத்திய பாகிஸ்தான், இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களால் சிரமத்திற்கு உள்ளானாலும், மொஹமட் நவாஸின் 38 ஓட்டங்கள் மற்றும் ஹுசைன் தலத்தின் ஆட்டமிழக்காத 32 ஓட்டங்கள் ஆகியவற்றின் உதவியுடன் வெற்றி பெற்றது.
