ஷார்ஜா: சகோதரனை இழந்த துக்கத்தில் இருந்தபோதிலும், நாட்டுக்காக மீண்டும் விளையாட வந்த ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் ரஷித் கானுக்கு, பாகிஸ்தான் வீரர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த சம்பவம், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷார்ஜாவில் நேற்று (29) நடைபெற்ற முத்தரப்புத் தொடரின் போட்டிக்கு முன்பாக, ஆப்கானிஸ்தான் அணியின் உடை மாற்றும் அறைக்குச் சென்ற பாகிஸ்தான் வீரர்கள், ரஷித் கானுக்குத் தமது இரங்கலைத் தெரிவித்தனர். குறிப்பாக, வேகப்பந்து வீச்சாளர் சாகின் அப்ரிடி, ரஷித் கானை அணைத்து ஆறுதல் கூறினார்.
இரு நாட்டு ரசிகர்களிடையே கடும் போட்டி நிலவும் சூழலில், பாகிஸ்தான் வீரர்களின் இந்த மனிதாபிமானச் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.