30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெய்ஜிங்
“30 ஆண்டுகளுக்கு முன்னர், பெய்ஜிங் பெண்கள் மேம்பாடு குறித்து மிக முக்கியமான உச்சிமாநாட்டை நடத்தியது. அன்று விவாதிக்கப்பட்ட விடயங்கள் இன்றும் உண்மையாகவே உள்ளன,” எனக் குறிப்பிட்ட பிரதமர், மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் பெய்ஜிங் பெண்கள் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் ஒரு உச்சிமாநாட்டை நடத்துவது “மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்றார்.
சீனாவின் சாதனைகளும், இலங்கை-சீனா ஒத்துழைப்பும்
பெண்களின் முன்னேற்றத்திற்குப் பொருளாதார வாய்ப்புகளில் உள்ள சமத்துவமின்மையே பெரும் தடையாக இருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், “உண்மையான மாற்றங்களை அடைய, பொருளாதாரம், கல்வி மற்றும் சுகாதார அமைப்புகளில் பெண்களுக்கு அணுகலை வழங்கும் கட்டமைப்பு மாற்றங்களை நாம் கொண்டுவர வேண்டும்,” என வலியுறுத்தினார்.
சீனாவின் சாதனைகள் குறித்துப் பேசிய பிரதமர், “சீனப் பெண்கள் இன்று அதிக நம்பிக்கையுடனும், சுதந்திரமாகவும், பொது வாழ்வில் சுறுசுறுப்பாகவும் உள்ளனர். பொருளாதார ரீதியாகப் பெண்களுக்கு வலுவூட்டுவதில் சீனா உண்மையான முன்னேற்றங்களை அடைந்துள்ளது,” என்றார்.
பெண்கள் வலுவூட்டல் மற்றும் பால்நிலை சமத்துவத்தை மேம்படுத்துவதில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே ஒத்துழைப்புக்கான பரந்த வாய்ப்புகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். “சீனாவில் வலுவான பெண் தலைவர்கள் உள்ளனர், இலங்கையிலும் இந்த ஆண்டு வரலாற்று ரீதியாக அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பாராளுமன்றத்தில் உள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வைப் பாதிக்கும் கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களில், எமது ஒத்துழைப்புக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன,” என்றார்.
சீனாவுக்கு நன்றி இலங்கைக்குப் பாடசாலை சீருடைத் துணியை வழங்கியமைக்காக சீனாவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், அது சீன மக்களிடமிருந்து கிடைத்த ஒரு “மகத்தான பரிசு” என்றார். பெய்ஜிங் மாநாடு குறித்துத் தனது எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்திய அவர், “கடந்த 30 ஆண்டுகளின் பிரதிபலிப்பாகவும், நாம் எப்படி முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்கும் இந்த உச்சிமாநாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நான் நம்புகிறேன்,” எனக் கூறினார். இந்த சர்வதேச நிகழ்வு பெண்களின் முன்னேற்றத்தில் ஒரு மைல்கல்லாக அமையும்.