யாழ்ப்பாணம்: வட மாகாணத்திற்கான பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்களை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (01) யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளார். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைப்பது, இன்றைய நிகழ்வுகளின் முக்கிய அம்சமாகும்.
இன்று காலை மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார். நீர், மின்சாரம், குளிரூட்டல் வசதிகள் மற்றும் ஏல மண்டபங்கள் உள்ளிட்ட புதிய வசதிகள், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு மாகாண மீனவர்களுக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, யாழ். மாவட்ட செயலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தையும் ஜனாதிபதி திறந்து வைப்பார். இது வட மாகாண மக்கள் கடவுச்சீட்டினை இலகுவாகப் பெற உதவும். மேலும், யாழ். பொது நூலகத்தின் மின்-நூலகத் (E-Library) திட்டத்தையும் அவர் அங்குரார்ப்பணம் செய்து வைப்பார்.