அனைத்து மதங்களின் ஒற்றுமையே நீதிக்கு அவசியம்”: மாத்தறை அன்னை தேவாலயத் திருவிழாவில் பிரதமர்
மாத்தறை: நாட்டில் நீதி மற்றும் சமத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கு, அனைத்து மதங்களுக்குமிடையிலான ஒற்றுமை அவசியமானது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மாத்தறை அன்னை தேவாலயத்தின் 118ஆவது வருடாந்தத் திருவிழாவில் நேற்று (13) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இத்திருவிழாவின்போது, பிரதமருக்காக விசேட ஆசீர்வாதப் பூஜையொன்று நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாத்தறைப் பிரதேசத்தில் உள்ள பௌத்த மதகுருமார் உள்ளிட்ட சர்வமதத் தலைவர்களுடன் பிரதமர் சிநேகபூர்வ சந்திப்பொன்றையும் நடத்தினார்.
“இந்தத் தேவாலயத்திற்கும், நகரிலுள்ள ஏனைய மதத் தலங்களுக்கும் இடையிலான ஒற்றுமை பாராட்டத்தக்கது. இந்த முன்மாதிரி மாத்தறையைத் தாண்டி, முழு நாட்டிற்கும் பரவ வேண்டும்,” எனப் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார். “இந்த முன்மாதிரியை வழங்கிய வணக்கத்திற்குரிய தேரர்களுக்கும், சுவாமிமார்களுக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்,” எனவும் அவர் கூறினார்.
இந்நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள், பௌத்த மகா சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
