தனியார் பேருந்து உரிமையாளர்களை அரசு பழிவாங்குகிறது”: கெமுனு விஜேரத்ன – வேலைநிறுத்த எச்சரிக்கை!
கொழும்பு: தற்போதைய அரசாங்கம், தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக “தொடர்ச்சியான பழிவாங்கல்” நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்ன குற்றம் சாட்டியுள்ளார். தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாவிட்டால், நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் “தவிர்க்க முடியாதது” எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஊடகங்களிடம் நேற்று (14) பேசிய அவர், “பேருந்துகளை இறக்குமதி செய்ய முடியாத அளவிற்கு புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. கழுத்தை நெரித்துக்கொண்டு சுவாசிக்கச் சொல்வதைப் போல இது உள்ளது,” என்றார். கடந்த ஐந்து ஆண்டுகளாகப் புதிய பேருந்துகள் இறக்குமதி செய்யப்படாத நிலையில், பழைய பேருந்துகளைத் திருத்தியே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“அண்மையில் நடந்த பெரும்பாலான விபத்துக்களில் சுற்றுலாப் பேருந்துகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைப் பேருந்துகளே சம்பந்தப்பட்டுள்ளன,” எனக் கூறிய அவர், தமது தேர்தல் பிரசாரத்திற்கு பெரிதும் உதவிய தனியார் பேருந்துத் துறையை அரசாங்கம் நசுக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். போக்குவரத்துத் துறையில் உள்ள இந்தக் பிரச்சினைகளுக்கு அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் எனவும் அவர் கோரினார்.
