Headlines

BREAKING: ரணில் விக்ரமசிங்க கோட்டை நீதிமன்றில் சற்றுமுன் ஆஜர்!

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் மீது பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று (ஒக். 29) மதியம் 1:30 மணிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையிலேயே அவர் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

பின்னணி என்ன?

அவர் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் (2023 ஆம் ஆண்டு), அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவுக்கு பிரித்தானியப் பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற கௌரவிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, அரச நிதியை துஷ்பிரயோகம் செய்து ஐக்கிய இராச்சியம் சென்றதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க கடந்த ஆகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரானதையடுத்து, ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளை மீளாய்வு செய்த கோட்டை நீதவான் நிலுபுலி லங்கபுர, தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவித்ததுடன், இந்த வழக்கை இன்று (ஒக். 29) மீண்டும் விசாரணைக்கு அழைக்க உத்தரவிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *