ஷார்ஜா: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் ரஷித் கான், சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற புதிய உலக சாதனையை நேற்று (01) படைத்துள்ளார். நியூசிலாந்தின் டிம் சவுத்தியின் (164 விக்கெட்டுகள்) சாதனையை அவர் முறியடித்தார்.
ஷார்ஜாவில் நடைபெற்ற ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியில், 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ரஷித் கான் தனது 98ஆவது போட்டியில் 165 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன்மூலம், அதிவேகமாக இந்தச் சாதனையை நிகழ்த்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
இந்தப் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்ராஹிம் சத்ரான் (63) மற்றும் செதிக்குல்லா அடல் (54) ஆகியோரின் அரைசதங்களால் ஆப்கானிஸ்தான் 188 ஓட்டங்களைக் குவித்தது. பந்துவீச்சில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.