மாஸ்கோ: சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் அமெரிக்காவுக்கு எதிராகச் “சதி” செய்வதாக, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள கருத்துக்கு, ரஷ்யா பதிலளித்துள்ளது. ட்ரம்பின் இந்தக் கருத்து “உருவகமாகச் சொல்லப்பட்டதாகவே” தாங்கள் நம்புவதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
சீனாவின் இராணுவ அணிவகுப்பு இன்று (03) நடைபெற்ற நிலையில், அதற்கு வாழ்த்துத் தெரிவித்து தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் பதிவிட்ட ட்ரம்ப், “நீங்கள் அமெரிக்காவுக்கு எதிராகச் சதி செய்யும்போது, புடின் மற்றும் கிம் ஜாங் உன்னுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்,” எனக் கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “யாரும் யாருக்கும் எதிராக சதித்திட்டம் தீட்டவில்லை. சீனா, வட கொரியா போன்ற நாடுகளுடனான எமது உறவுகள், எமது மக்களின் நன்மைக்காகவே உள்ளனவே தவிர, எந்தவொரு மூன்றாவது நாட்டிற்கும் எதிரானதல்ல,” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.