இந்திய வீரர்கள் மீது தவறில்லை, மேலிடத்து உத்தரவே காரணம்”: கைகுலுக்கல் சர்ச்சை குறித்து அப்ரிடி
துபாய்: இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகான கைகுலுக்கல் சர்ச்சை குறித்துப் பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் அணித் தலைவர் ஷாகித் அப்ரிடி, “இதில் இந்திய வீரர்கள் மீது எந்தத் தவறும் இல்லை; மேலிடத்திலிருந்து வந்த உத்தரவுகளையே அவர்கள் பின்பற்றுகிறார்கள்,” எனக் கூறியுள்ளார்.
“சமூக வலைத்தளங்களில் எழுந்த கடும் அழுத்தத்தின் காரணமாகவே, பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க வேண்டாம் என பிசிசிஐ உத்தரவிட்டிருக்கும் என நான் நம்புகிறேன். இந்தச் செயல் விளையாட்டு உணர்வுக்கு அழகல்ல. இது உலகத்தின் முன்னிலையில் இந்திய வீரர்களுக்கே அவப்பெயரை ஏற்படுத்தும்,” என அப்ரிடி தெரிவித்துள்ளார்.
“ஒரு வீரர் தான் நாட்டின் சிறந்த தூதராக இருக்க முடியும், அவமானச் சின்னமாக மாறக்கூடாது,” எனக் குறிப்பிட்ட அப்ரிடி, போட்டிக்கு முன்னர் கோப்பை அறிமுக விழாவில், சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் தரப்பினருடன் கைகுலுக்கியதைச் சுட்டிக்காட்டினார். சர்வதேச கிரிக்கெட் உலகில் இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
