இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மணி வசந்த் நடித்துள்ள ‘மதராஸி’ திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இத்திரைப்படத்தின் பின்னணியில் சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.
சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த ‘அமரன்’ திரைப்படம் சுயசரிதைப் படமாக இருந்தாலும், அது விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஏறத்தாழ அதே பாணியில், ஆனால் சுயசரிதை அல்லாமல் ஒரு ஆக்ஷன் கதையாக ‘மதராஸி’ உருவாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷாருக்கானுக்கு எழுதப்பட்ட கதையும் அதிகரித்த எதிர்பார்ப்பும்
‘மதராஸி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துகொண்டார். அதாவது, இப்படத்தின் கதை முதலில் நடிகர் ஷாருக்கானிடம் கூறப்பட்டதாகவும், பின்னர் சிவகார்த்திகேயன் ஏற்று நடித்ததாகவும் அவர் தெரிவித்தார். ஷாருக்கானுக்கு எழுதப்பட்ட கதையில்தான் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறாரா? என்ற செய்தி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
‘மதராஸி’ ஒரு கமர்ஷியல் படம் மட்டுமே – சிவகார்த்திகேயன்
‘மதராஸி’ திரைப்படம் குறித்து ‘தமிழ் இந்து திசை’ செய்தி ஊடகத்திற்கு சிவகார்த்திகேயன் அளித்த பேட்டியில், “இது ஒரு கமர்ஷியல் திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் மூலம் எந்தவொரு கருத்தும் சொல்லப்படவில்லை. இது ஒரு முழுமையான ஆக்ஷன் படம் மட்டுமே” என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த சிவகார்த்திகேயன், ‘அமரன்’ படத்தில் சிக்ஸ் பேக் வைக்க ஸ்டீராய்டு பயன்படுத்தியதாகப் பரவிய செய்திகள் வெறும் வதந்தி என்றும் மறுப்புத் தெரிவித்தார். “ஒவ்வொரு படத்திலும் நான் எதிர்பார்ப்பது ஒன்றுதான். படத்தின் கதையை நான் எந்த அளவுக்குத் தாங்கியிருக்கிறேன் என்பதுதான் எனது எதிர்பார்ப்பு. அதுவே என்னுடைய வேலை என்று நினைக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமீபகாலமாக சிவகார்த்திகேயனின் படங்கள், குறிப்பாக ‘மாவீரன்’ திரைப்படத்திற்குப் பிறகு, விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தொடர் வெற்றிகளைப் பெற்று வருகின்றன. இதனால் ஆக்ஷன் பட வாய்ப்புகள் அவரைத் தேடி வருகின்றன. அந்த வகையில், ‘மதராஸி’ அவரது 24வது திரைப்படமாகும். இதையடுத்து, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இதனால் அவரது படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
எங்கள் Facebook பக்கத்தில் இணைந்துகொள்ள, இங்கே கிளிக் செய்யவும்.