இலங்கையில் 5G ஏலம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு: 2 மாதங்களில் பாவனைக்கு வரும் என எதிர்பார்ப்பு!
கொழும்பு: இலங்கையில் 5G தொழில்நுட்பத்திற்கான அலைக்கற்றை ஏலம் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு, இன்று (03) வெளியிடப்பட்டது. இதன்மூலம், அடுத்த தலைமுறைத் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான வலுவான அடித்தளம் இடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இது குறித்துக் கூறுகையில், “5G தொழில்நுட்பம், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும், புத்தாக்கத்திற்கும், கைத்தொழில் வளர்ச்சிக்கும் ஒரு முக்கிய வழியாக அமையும்,” என்றார். சுகாதாரம், கல்வி, விவசாயம் போன்ற துறைகளில் இது மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஏலத்திற்கான அனைத்துத் தகவல்களும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஏலச் செயல்முறை இரண்டு மாதங்களுக்குள் நிறைவடையும் எனவும், அதன் பின்னர் பொதுமக்கள் 5G சேவைகளைப் பெற முடியும் எனவும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
