கொழும்பு: உள்நாட்டுச் சந்தையில் முட்டையின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் விலை 18 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை 20 ரூபாவாகவும் விற்பனை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாரிய முட்டை உற்பத்தியாளர்களின் ‘மாஃபியாவை’ நிறுத்தும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, சங்கத்தின் தலைவர் நவோத் சம்பத் பண்டார தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சந்தை நிலவரம் குறித்த சரியான புரிதல் இல்லாமல், தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் விலைகளைக் குறைப்பது ஆபத்தான நடவடிக்கை என அகில இலங்கை கோழி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர எச்சரித்துள்ளார்.
இதேவேளை, உலக முட்டை தினத்தை முன்னிட்டு நேற்று (10) நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய ருஹுணு பல்கலைக்கழக பேராசிரியர் இதுனில் பத்திரண, இலங்கையில் உள்ள மேலதிக முட்டை உற்பத்தியை ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்படுவதாகக் கூறினார்.
