கொழும்பு: மீன்பிடி இழுவை படகு ஒன்றிலிருந்து சுமார் 5 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள 350 கிலோகிராமுக்கும் அதிகமான கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (‘ஐஸ்’) மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜெயசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த படகில் இருந்து போதைப்பொருள் அடங்கிய 16 பைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் இந்த பல நாள் மீன்பிடி படகு, நாட்டின் மேற்குக் கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் இலங்கை கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டு, இன்று (நவம்பர் 02) காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
ஆழ்கடலில் சிறப்பு நடவடிக்கை
இலங்கையின் மேற்குக் கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் மீன்பிடி படகு ஒன்று பெருமளவிலான போதைப்பொருட்களைக் கடத்துவதாகக் கிடைத்த நம்பகமான புலனாய்வுத் தகவலைத் தொடர்ந்து, நேற்று இந்த சிறப்பு கடற்படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படையினர் நீண்ட தூர கடற்படைச் சொத்துக்களைப் பயன்படுத்தி படகை இடைமறித்தனர். இழுவைப் படகில் ஏறிச் சோதனையிட்ட கடற்படை அதிகாரிகள், படகில் இருந்த ஆறு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
