Headlines

காலி இடங்கள் உள்ள பாடசாலைகளில் மாத்திரமே மாணவர் அனுமதி: கல்வி அமைச்சர் ஹரிணி திட்டவட்டம்!

கொழும்பு: புதிய கொள்கையின் பிரகாரம், “காலி இடங்கள் உள்ள பாடசாலைகளில் மாத்திரமே மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்,” என கல்வி அமைச்சு அமைச்சர், கலாநிதி ஹரிணி அமரசூரிய திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர் அனுமதி தொடர்பான இடைக்காலச் சுற்றறிக்கை தாமதமாக வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கல்வி அமைச்சிற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினருடன் நேற்று (15) கலந்துரையாடியபோதே அவர் இதனைக் கூறினார். பிரபலமான பாடசாலைகளில் நிலவும் கடுமையான இடநெருக்கடியைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், “ஒரு வகுப்பறையின் அதிகபட்சக் கொள்ளளவு 45 ஆக இருக்கும் நிலையில், சில பாடசாலைகளில் 60 மாணவர்கள் வரை உள்ளனர். இது கல்வியின் தரத்தைப் பாதிக்கிறது,” என்றார். மாணவர் மீதான அழுத்தத்தைக் குறைப்பதே தமது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய சுற்றறிக்கையை இறுதி செய்வதற்கு முன்னர், பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய உப குழு மற்றும் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடப்பட்டதாலேயே, சுற்றறிக்கை தாமதமானதாக அவர் விளக்கமளித்தார். “கடந்த காலங்களில் நடந்தவற்றுக்கு எங்களால் பொறுப்பேற்க முடியாது, ஆனால் அந்தப் பிரச்சினைகளை நாங்கள் சரிசெய்ய வேண்டும்,” எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *