கொழும்பு: இந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கெஹெல்பத்தர பத்மே’ உள்ளிட்ட ஐவரின், கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான விசாரணைகளை, சட்டவிரோத சொத்துக் குவிப்பு விசாரணைப் பிரிவு ஆரம்பித்துள்ளது.
இதன்படி, ‘கெஹெல்பத்தர பத்மே’க்குச் சொந்தமான சுமார் 75 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கம்பஹா, மினுவாங்கொட உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், வீடுகள், காணிகள் மற்றும் வாகனங்கள் இதில் அடங்கும். பெரும்பாலான சொத்துக்களை அவர் தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் வாங்கியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, அவருடன் கைது செய்யப்பட்ட ‘கொமாண்டோ சலிந்த’, ‘பாணந்துறை நிலங்க’, ‘பக்கோ சமன்’ மற்றும் ‘தெம்பிலி லஹிரு’ ஆகியோரின் சொத்துக்கள் குறித்தும் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.