ராஞ்சி (இந்தியா): இந்தியாவின் ராஞ்சி நகரில் நடைபெறும் 4வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சம்பியன்ஷிப் போட்டியில் (4th South Asian Senior Athletics Championships 2025) இலங்கை ரிலே அணிகள் ஆதிக்கம் செலுத்தி, இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன.
ரிலே அணிகள் ஆதிக்கம்
ஆண்களுக்கான 4×100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் (Men’s 4x100m relay) இலங்கை அணி, 39.99 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பெண்களுக்கான 4×100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியிலும் (Women’s 4x100m relay) இலங்கை வீராங்கனைகள் 44.70 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தனர்.
கலிங்க குமாரகேவுக்கு தங்கம்
இதேவேளை, ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் இலங்கையின் கலிங்க குமாரகே (Kalinga Kumarage) 46.21 வினாடிகளில் பந்தய தூரத்தை நிறைவு செய்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இதே போட்டியில் பங்குபற்றிய மற்றுமொரு இலங்கை வீரரான கல்ஹார இந்துப (Kalhara Indupa) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
மேலும் இரண்டு வெண்கலம்
ஆண்களுக்கான வட்டு எறிதல் (Discus Throw) போட்டியில், முன்னாள் நீளம் பாய்தல் வீரரான மிலந்த சம்பத் (Milantha Sampath) இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் இலங்கையின் சயூரி மெண்டிஸ் (Sayuri Mendis) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இந்தப் போட்டிகளில் இதுவரை இலங்கை 3 தங்கம் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
