கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீரகெட்டிய இல்லத்திற்கான, செலுத்தப்படாத 26 இலட்சம் ரூபாய் (2.6 மில்லியன்) மின் கட்டணம் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (11) அனுமதி வழங்கியுள்ளது.
பொலன்னறுவை சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்த சட்டத்தரணி விஜித குமாரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணமே இது எனவும், அதனைச் செலுத்தத் தவறியதன் மூலம், அரசியலமைப்பின் 12(1) பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சட்டத்தின் முன் சமத்துவம் என்ற அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த மனுவில், இலங்கை மின்சார சபை, அதன் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
