தங்காலை போதைப்பொருள் மீட்பு விவகாரம்: மேலும் இருவர் CIDயால் கைது!
கொழும்பு: தங்காலையில் நேற்று (22) கைப்பற்றப்பட்ட பாரிய போதைப்பொருள் தொகுதி தொடர்பில், மேலும் இரண்டு முக்கிய சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை மற்றும் கொழும்புப் பகுதிகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் விநியோக வலையமைப்பில் முக்கியப் பங்காற்றியவர்கள் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நேற்றைய தினம், சீனிமோதரவில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டை மையப்படுத்தி நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்தே, மூன்று லொறிகளிலிருந்து 245 கிலோ ஹெரோயின், 380 கிலோ ‘ஐஸ்’ மற்றும் T-56 ரகத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன.
