தலவாக்கலை: சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘கெஹெல்பத்தர பத்மே’ உள்ளிட்ட பாதாள உலகக் குழுவினருக்குத் தகவல் தொடர்பாடல் உதவிகளை வழங்கிய முக்கிய சந்தேகநபர் ஒருவர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளார். மீட்டியகொட பகுதியில் இடம்பெற்ற பல கொலைச் சம்பவங்களிலும் இவர் தேடப்பட்டு வந்தவர் ஆவார்.
தலவாக்கலை, அகரபத்தனையில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் வைத்து, நேற்று (02) இரவு இவர் கைது செய்யப்பட்டார். இந்தோனேசியாவிலிருந்து செயற்பட்ட பாதாள உலகக் குழுவினர், இலங்கையில் உள்ளவர்களுடன் தொடர்புகொள்வதற்குத் தேவையான ‘வட்ஸ்அப்’ தொழில்நுட்ப வசதிகளை இந்த சந்தேகநபரே வழங்கியுள்ளார். கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுவினரின் தொலைபேசித் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததன் மூலமே, இவர் பிடிபட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மீட்டியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.