கொழும்பு: ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) வருடாந்த மாநாட்டிற்கு, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் அழைப்பதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 6ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்கான ஆயத்தக் கூட்டம் நேற்று (31) காலை நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஏனைய கட்சிப் பிரதிநிதிகளும் கலந்துகொள்வதற்கு ஏதுவாக, கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் அல்லாமல், ஒரு நடுநிலையான இடத்தில் மாநாட்டை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த முன்னாள் உறுப்பினர்கள் மீதான தடையை நீக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு முக்கிய முன்மொழிவுகளும், செப்டம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, இறுதி அங்கீகாரம் பெறப்படும்.