வாஷிங்டன்: அமெரிக்காவில் வெளிநாட்டினர் வேலை பெறுவதற்கான H-1B விசா நடைமுறைகளில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களுக்குப் பெரும் சவாலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய விதிகளின்படி, வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் தங்குவதற்கான அனுமதி அதிகபட்சம் 4 ஆண்டுகளாகக் குறைக்கப்படும். ஊடகவியலாளர்கள் போன்ற நிபுணர்களுக்கான ஆரம்பகட்ட அனுமதி 240 நாட்களாக மட்டுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தரக் குடியுரிமைக்கான ‘கிரீன் கார்டு’ வழங்கும் முறையிலும் மாற்றங்கள் வரவுள்ளன. அதேசமயம், செல்வந்தர்கள் நிரந்தரமாக வசிப்பதற்காக, 5 மில்லியன் டொலர் (சுமார் 43 கோடி ரூபாய்) கட்டணத்தில் ‘கோல்ட் கார்டு’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவும் ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுவதாகக் கூறப்பட்டாலும், இது இந்திய இளைஞர்களின் அமெரிக்கக் கனவுகளுக்குப் பெரும் தடையாக அமையும் என வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.