சென்னை: சமீபத்தில் நடைபெற்ற 10ஆவது விஜய் டெலிவிஷன் விருதுகள் விழாவில், ‘பைண்ட் ஆஃப் தி இயர்’ விருது வென்ற ‘அய்யனார் துணை’ சீரியல் நடிகர் அரவிந்த், தனது வாழ்க்கைப் போராட்டங்கள் குறித்த காணொளியைக் கண்டு மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதது, பார்வையாளர்களை நெகிழ வைத்துள்ளது.
அவரது சோகமான பின்னணி குறித்துக் காணொளியில் விவரிக்கப்பட்டது. அதன்படி, சினிமா கனவுகளுடன் சென்னைக்கு வந்த ஆரம்ப காலத்தில், அரவிந்த் தனது பெற்றோர் இருவரையும் கொரோனா பெருந்தொற்றால் அடுத்தடுத்த நாட்களில் பறிகொடுத்துள்ளார். அந்தப் பெரும் துயரம் மற்றும் பொருளாதாரப் போராட்டங்களுக்குப் பின்னரே, அவர் இன்று இந்த நிலையை அடைந்துள்ளார்.
விருதைப் பெற்றுக்கொண்ட பின்னர் நெகிழ்ச்சியுடன் பேசிய அரவிந்தின் கதையைக் கேட்டு, பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த அவரது மனைவியும், நடிகையுமான சங்கீதாவும் கண்ணீர் சிந்தினார்.
‘கனா காணும் காலங்கள்’ மூலம் அறிமுகமாகி, தற்போது ‘அய்யனார் துணை’ சீரியலின் ‘சோழன்’ கதாபாத்திரமாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ள அரவிந்தின் இந்தப் போராட்டம், பலருக்கும் ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது.
