சென்னை: நடிகர் யோகி பாபுவை மேடையில் அவமதித்ததாக எழுந்த சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, நிகழ்ச்சித் தொகுப்பாளர் வி.ஜே. பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நானும் யோகி பாபுவும் ஜாலியாகவே பேசிக்கொண்டோம், இதற்கு நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?” எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “30 நொடி வீடியோவைப் பார்த்துவிட்டு, நான் யோகி பாபுவை அசிங்கப்படுத்திவிட்டதாகப் பலர் தவறாகப் பரப்புகிறார்கள். எங்களுக்குள் நீண்டகாலமாக நட்பு உண்டு, ஐபிஎல் சமயங்களில்கூட இப்படி ஜாலியாகப் பேசியிருக்கிறோம். இதைச் சில உதவாக்கரைகள் வெறுப்புணர்வைத் தூண்டப் பயன்படுத்துகின்றனர்,” என்றார்.
சமீபத்தில், தயாரிப்பாளர் ரவி மோகன் பட விழாவில், யோகி பாபுவிடம் “நல்லவர் மாதிரி பேசாதீர்கள்” என பாவனா கூறியதும், அதற்கு யோகி பாபு, “நீ பின்னால் நின்று எனக்கு சேர் போடாதே என்றது தெரியும்” எனப் பதிலடி கொடுத்ததும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.