கொழும்பு, ஜனவரி 12: கல்விச் சீர்திருத்தங்களை எதிர்ப்பதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகம், தனித்த ஒரு நிகழ்வு அல்ல; இது ராஜபக்சக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து நடத்தும் மிகப் பெரிய சதித்திட்டத்தின் ஆரம்பம் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
“கே” இணையத்தள விவகாரம் – உண்மையா? சதியா? பாடப்புத்தகத்தின் ஒரு குறிப்பிட்ட அலகில், தவறான இணையத்தள முகவரி ஒன்று இடம்பெற்றிருந்தது உண்மைதான். ஆனால், இது கவனக்குறைவா அல்லது சதியா? அரசாங்கம் உடனடியாக அந்தப் பாட அலகை முழுமையாக நீக்கியதோடு, இது குறித்துத் தீவிர விசாரணை நடத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தை பணித்துள்ளது. அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்த, உள்ளுக்குள் இருக்கும் சதிகாரர்களால் இது திட்டமிட்டுச் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
பிரதமர் ஹரிணி மீதான “பாலியல் ரீதான” தாக்குதல்: பிரச்சினைக்குத் தீர்வு கண்ட பிறகும், எதிர்க்கட்சியினர் இதை விடுவதாக இல்லை. காரணம்? பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஒரு பெண், அதுவும் திருமணம் ஆகாதவர். இந்த இணையத்தள விவகாரத்தை வைத்துக்கொண்டு, அவரை “லெஸ்பியன்” என்று முத்திரை குத்தி, மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சிக்கின்றனர். ஒரு பெண் உயர்ந்த பதவியில் இருப்பதை, அதுவும் ஒரு தனி மனுஷியாக சாதிப்பதை, இந்த ஆணாதிக்க அரசியல்வாதிகளால் ஜீரணிக்க முடியவில்லை. அவரின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கொச்சைப்படுத்துவதன் மூலம், அவரின் அரசியல் பயணத்தை முடக்க நினைக்கிறார்கள். இது அவர்களின் தரம் தாழ்ந்த புத்தியைக் காட்டுகிறது.
எதிர்க்கட்சி செய்ய வேண்டியது என்ன? – 70 வருட சாபக்கேடு: உண்மையிலேயே நாட்டின் மீது அக்கறை இருந்தால் எதிர்க்கட்சி என்ன செய்திருக்க வேண்டும்? இந்தக் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஆரோக்கியமான விவாதத்தை முன்வைத்திருக்க வேண்டும். “இந்த பாடத்திட்டத்தில் என்ன குறை உள்ளது? இதை எப்படி இன்னும் மேம்படுத்தலாம்? எங்கள் எதிர்கால சந்ததியினருக்குச் சிறந்த கல்வி மாதிரியை எப்படி உருவாக்குவது?” என்று ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் பாடத்திட்டத்தைப் பற்றிப் பேசத் தயாராக இல்லை. அவர்களுக்குத் தேவை அரசியல் லாபம் மட்டுமே.
கடந்த 70 வருடங்களாக இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் செய்தது இதைத்தான். ஒருவர் செய்வதை மற்றவர் எதிர்ப்பது, குற்றம் சுமத்துவது – இதுதான் இலங்கையின் “அழுக்கு அரசியல்” வரலாறு. இத்தனை வருடங்களாக அடித்துக்கொண்டவர்கள், இப்போது ஒரு நல்ல மாற்றத்தைத் தடுக்க ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். நாட்டை மீண்டும் அதலபாதாளத்திற்கு இழுத்துச் செல்லும் இந்தச் செயலை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
கண்டி, அனுராதபுரத்திற்குப் படையெடுக்கும் எதிர்க்கட்சிகள்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாகக் கவனித்தால் ஒரு விடயம் புரியும். ராஜபக்சக்களும், எதிர்க்கட்சியினரும் வரிசையாகக் கண்டி மற்றும் அனுராதபுரத்திற்குச் சென்று மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து வருகின்றனர். இந்த “இணையத்தள விவகாரத்தை” மதப் பிரச்சினையாகவும், கலாச்சாரப் பிரச்சினையாகவும் மாற்றி, பௌத்த பீடங்களின் ஆதரவைப் பெற்று, அரசாங்கத்திற்கு எதிராக மக்களைத் திசை திருப்புவதே இவர்களின் திட்டம். இது அவர்களின் வழக்கமான “மதவாத அரசியல்” உத்தி.
விமலின் ஊழல் பயம்: விமல் வீரவன்ச ஏன் இப்போது வீதியில் இறங்குகிறார்? அவர் அமைச்சராக இருந்தபோது செய்த பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளன. சிறைக்குச் செல்ல வேண்டிய பயத்தில், தன்னை “அரசியல் கைதி” போலக் காட்டிக்கொள்ளவே இந்த நாடகம்.
தமிழ் தலைமைகளுக்குக் கடும் எச்சரிக்கை: தமிழ் அரசியல்வாதிகளே! விமல் மற்றும் ராஜபக்சக்களின் இந்த நாடகத்தைப் புரிந்துகொள்ளுங்கள். இவர்களுக்குத் துணைபோகாதீர்கள். 70 வருடங்களாக நாட்டைச் சீரழித்த இவர்களுடன் மீண்டும் கைகோர்த்தால், தமிழ் மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். தேவையற்ற நாடகங்களில் பங்கெடுத்து, உங்கள் அரசியல் எதிர்காலத்தைப் புதைகுழிக்குத் தள்ளாதீர்கள்.
மக்களின் தீர்ப்பு: கடந்த 15 மாதங்களாக ஜனாதிபதி அநுரவின் அரசாங்கம் நாட்டை மீட்டெடுத்து வருகிறது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை விட்டுவிட்டு, ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கொச்சைப்படுத்தி அரசியல் செய்யும் இவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
– D. வேலுப்பிள்ளை
