சென்னை: நடிகர் ரவி மோகனின் புதிய தயாரிப்பு நிறுவனத் தொடக்க விழாவில், நடிகர் யோகி பாபுவிடம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் வி.ஜே. பாவனா கேட்ட கேள்வியும், அதற்கு யோகி பாபு அளித்த பதிலும் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சியின்போது, ‘உங்கள் மைண்ட் வாய்ஸ் என்ன?’ என யோகி பாபுவிடம் பாவனா கேட்டுள்ளார். அதற்கு யோகி பாபு, “என்னை வைத்துப் படம் எடுக்கும் தயாரிப்பாளர் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்,” என்றார். உடனடியாக பாவனா, “நல்லவர் மாதிரி பேசாதீர்கள், மனதில் நினைத்ததைச் சொல்லுங்கள்,” எனக் கூற, யோகி பாபுவின் முகம் மாறியது.
பின்னர் சுதாரித்துக்கொண்ட யோகி பாபு, “நான் உண்மையிலேயே அதைத்தான் நினைத்தேன். உன்னைப் போல் நினைக்கவில்லை. நீ பின்னால் நின்று ‘அவரை உள்ளே விடாதீர்கள், சேர் கொடுக்காதீர்கள்’ என்றெல்லாம் சொன்னது எனக்குத் தெரியும்,” எனப் பதிலடி கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பாவனா, பேச்சை மாற்றிவிட்டு மைக்கை வாங்கிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.
ஒரு கலைஞனைப் பொது மேடையில் அவமதித்ததாக, வி.ஜே. பாவனாவுக்கு எதிராக இணையத்தில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.