கொழும்பு: “நாட்டைக் கட்டியெழுப்பத் தேவையான சக்தி, திறன் மற்றும் மனப்பான்மை இந்த நாட்டின் பிள்ளைகளிடம் உள்ளது எனவும், அவர்கள் முன்னோக்கிச் செல்வதற்கான பாதைகளைத் திறந்து கொடுப்பதே பெரியவர்களின் பொறுப்பு,” எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அலரி மாளிகையில் நேற்று (10) ஆரம்பமான ‘இலங்கை திறமைக் கண்காட்சி 2025’ (Sri Lanka Skills Expo 2025) அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் இளைஞர் வேலையின்மைக்குத் தீர்வு காணும் நோக்கில், கைத்தொழில் துறை திறன் சபைகள் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சி, இன்றும் (11) அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
பிரதமர் மேலும் உரையாற்றுகையில்:
“நாம் ஆரம்பித்துள்ள கல்வி உருமாற்றச் செயன்முறையில் இது ஒரு திருப்புமுனையாகும். கல்விக்குள் இருக்கும் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதுடன், அந்த வாய்ப்புகளைப் பிள்ளைகள் தாமாகவே அடையாளம் கண்டுகொள்வதற்கான பாதையையும் இது திறந்துவிடும்.
தற்போது கல்வியை முடித்து சமூகத்தில் நுழையத் தயாராகும் தலைமுறை, எண்ணற்ற சவால்களை எதிர்கொள்கிறது. தொழில்நுட்பத்தால் ஏற்படும் விரைவான மாற்றங்களால், உலகம் கற்பனைக்கு எட்டாத வேகத்தில் மாறி வருகிறது. பாரம்பரியப் பாதைகள் இனி வெற்றியை உறுதி செய்யாது. எனவே, இந்த மாற்றங்களைப் பற்றிய சரியான புரிதலுடன் நமது கல்விப் பயணம் அமைய வேண்டும்.
இந்தக் கண்காட்சி ஒரு புதிய உலகத்தையும், புதிய சமூகத்தையும் உங்களுக்குத் திறந்து காட்டுகிறது. சமூகத்தில் நீங்கள் நினைப்பதை விட அதிகமான வாய்ப்புகள் உங்களுக்காக உள்ளன என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். உங்களுக்காக ஒரு இடம் இருக்கிறது, நீங்கள் முன்னோக்கி வருவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். இந்தப் பொறுப்பை ஏற்று, நம்பிக்கையுடன் முன்னேறுங்கள். நீங்கள் முன்னேறும்போது, இந்த நாட்டைக் கட்டியெழுப்ப எங்களுக்கு ஆதரவளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம்,” எனப் பிரதமர் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வில், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நளின் ஹேவகே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
