Headlines

அணு ஆயுத விவகாரம்: அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை ஒப்பந்தமின்றி நிறைவு!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள், எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளதாக அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வேன்ஸ் (JD Vance) ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 11) தெரிவித்தார். அணு ஆயுதங்களை உருவாக்கக் கூடாது என்ற அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க ஈரான் மறுத்ததே இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டார்.

சுமார் 21 மணி நேரம் நீடித்த இந்தப் பதற்றம் நிறைந்த பேச்சுவார்த்தை குறித்து, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் நிர்வாகத்தின் பிற அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாக வேன்ஸ் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய துணை அதிபர் வேன்ஸ், “ஈரான் அணு ஆயுதத்தை நாடாது என்றும், அணு ஆயுதத்தை விரைவாக அடைவதற்கு உதவும் கருவிகளை நாடாது என்றும் உறுதியான அமிக்கையை (commitment) நாங்கள் காண வேண்டும் என்பதே எளிய உண்மை. இதுதான் அணு ஆயுதங்கள் தொடர்பான முக்கியப் பிணக்கு,” என்றார்.

“இதுதான் அமெரிக்க அதிபரின் முதன்மையான குறிக்கோள். இந்தப் பேச்சுவார்த்தைகளின் மூலம் நாம் சாதிக்க முயன்றதும் அதுதான்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறுதிச் சலுகை:

“நாங்கள் இங்கிருந்து புறப்படும்போது ஒரு எளிய முன்மொழிவை, ஒரு புரிந்துணர்வு முறையை (method of understanding) ஈரானிடம் அளித்துள்ளோம். இதுவே எங்களது இறுதியான மற்றும் சிறந்த சலுகை (final and best offer). இதனை ஈரானியர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்று பார்ப்போம்,” என வேன்ஸ் தெரிவித்தார்.

ஈரான் அணு குண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை என்று வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கப்பட்ட போரின்போதும், ஈரானின் உணர்திறன் மிக்க பகுதிகள் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் குண்டுவீசித் தாக்கின என்பது குறிப்பிடத்தக்கது.

“ஈரானியர்கள் அணு ஆயுதத்தை உருவாக்கக் கூடாது என்பதில் அடிப்படையான விருப்ப உறுதிப்பாடு உள்ளதா என்பதுதான் எளிய கேள்வி – இது இப்போது மட்டுமல்ல, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் மட்டுமல்ல, நீண்ட காலத்திற்கும் பொருந்த வேண்டும்,” என்று வேன்ஸ் கூறினார்.

மேலும், “அத்தகைய உறுதிப்பாட்டை நாங்கள் இன்னும் காணவில்லை. காண்போம் என்று நம்புகிறோம்,” என்றும் அவர் முடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *