முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்த ஊடக சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த அவர், இவ்வாறான நபர்களை மரண தண்டனையிலிருந்து விடுவிப்பதை ஜனாதிபதியால் ஒரு பேனை அசைவில் (ஒற்றைக் கையெழுத்தில்) செய்ய முடியும் என்று குறிப்பிட்டார்.
“அமரகீர்த்தி கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு மன்னிப்பு வழங்குங்கள். இவ்வாறானவர்களை மரண தண்டனையிலிருந்து விடுவிப்பது ஜனாதிபதி ஒரு பேனை அசைவில் செய்ய வேண்டிய காரியம்” என்றும் அவர் கூறினார்.
முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 12 பேருக்கு, கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி கம்பஹா மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசேட அமர்வு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
