அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் முன்னெடுத்துள்ள அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (10) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
உள்ளகப் பயிற்சி முடித்த மருத்துவர்களுக்கான நியமனங்கள் தொடர்பான ஒப்பந்தங்களைச் சுகாதார அமைச்சு மீறியதாகக் குற்றம் சுமத்தி, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று (09) காலை 8:00 மணிக்கு இந்த நாடளாவிய வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தது.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த வேலைநிறுத்தம் மருத்துவமனை நடவடிக்கைகளை ஸ்தம்பிதமடையச் செய்துள்ளதுடன், நோயாளர்களுக்குப் பெரும் அசெளகரியங்களை ஏற்படுத்தியுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
வெளியிடப்பட்ட உள்ளகப் பயிற்சி மருத்துவர்களின் இடமாற்றப் பட்டியல் உடனடியாக மீளப் பெறப்பட்டு, ஒரு தீர்வு எட்டப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் கலந்துரையாடச் சுகாதார அமைச்சர் ஏற்கனவே மறுத்துவிட்டார்.
இதேவேளை, எதிர்கால நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிக்க இன்று நாடு முழுவதும் உள்ள உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார்.
