Headlines

இலங்கை – ஜிம்பாப்வே டி20 மோதல்: கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்!

கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (19) பிற்பகல் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு, இலங்கை பொலிஸாரால் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் மற்றும் போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

‘குரூப் B’ பிரிவைச் சேர்ந்த இந்தப் போட்டி பிற்பகல் 3:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் விளக்கமளித்த போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதிீர, நண்பகல் 12:00 மணிக்கே மைதானத்தின் நுழைவாயில்கள் திறக்கப்படும் என்பதால், இரசிகர்கள் நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு முன்கூட்டியே வருகை தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போக்குவரத்துத் திட்டம்:

இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் போது அமுல்படுத்தப்பட்ட அதே விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டமே இன்றும் அமுலில் இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, நண்பகல் 12:00 மணி முதல் பின்வரும் வீதிகளில் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு (Parking) அனுமதி வழங்கப்பட மாட்டாது:

  • சங்கராஜ மாவத்தை மற்றும் சுமணதிஸ மாவத்தை
  • வின்சென்ட் பெரேரா மாவத்தை
  • பிரிட்டோ பாபாபுள்ளே இடம், கோயில் வீதி (Temple Road), கெத்தாராம வீதி
  • செபஸ்டியன் கால்வாய் வீதி
  • 100 அடி வீதி
  • ஸ்ரீ போதிராஜ மாவத்தை
  • மாளிகாவத்தை வீதி மற்றும் ஜும்மா மஸ்ஜித் வீதி
  • பிரதீபா மாவத்தை மற்றும் சத்தர்ம மாவத்தை

மேலும், ஆர். பிரேமதாச மைதானத்தை நோக்கிச் செல்லும் வீதிகளிலும் வாகனப் போக்குவரத்துக் மட்டுப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

வாகனத் தரிப்பிட வசதிகள்:

இதேவேளை, வாகனங்களை நிறுத்துவதற்காக 6 பிரத்தியேக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்:

  1. மைதான வாகனத் தரிப்பிடம்: விஐபி (VIP), விவிஐபி (VVIP) அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு (165 வாகனங்கள்).
  2. சதொச மைதானம் மற்றும் புகையிரத முற்றம்: முச்சக்கரவண்டிகள், வேன்கள், மோட்டார் சைக்கிள்கள், கார்கள் போன்ற இலகு ரக வாகனங்களுக்கு (500 வாகனங்கள்).
  3. செபஸ்டியன் கால்வாய் வீதி: முதல் பாலத்திலிருந்து இரண்டாவது பாலம் வரை (80 வாகனங்கள்).
  4. எப்பல்வத்தை (150 வாகனங்கள்).
  5. கோவில் வீதி (200 வாகனங்கள்).
  6. ஆதி சிய வீதியின் (Adi Seya Road) இருபுறமும் (150 வாகனங்கள்).

இரசிகர்கள் போக்குவரத்து தொடர்பான ஏதேனும் உதவியைப் பெற விரும்பினால், கடமையிலுள்ள பொலிஸ் அதிகாரிகளை அணுகலாம் அல்லது 0112-433 333 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *