இலங்கையில் அமுலில் உள்ள அவசரகால நிலை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
2026 ஜனவரி 28 ஆம் திகதி முதல் இலங்கையில் அவசரகால நிலையை நீடித்து, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
(1959 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டம், 1978 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்கச் சட்டம் மற்றும் 1988 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டம் ஆகியவற்றால் திருத்தப்பட்டவாறான) பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) 2 ஆம் பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், இக்கட்டளைச் சட்டத்தின் II ஆம் பகுதியின் ஏற்பாடுகள் இலங்கை முழுவதும் நடைமுறைக்கு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்தப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நாட்டின் இயல்பு நிலையைப் பேணவும், பொதுமக்களின் வாழ்வுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைத் தொடர்ந்து பேணுவதை உறுதிசெய்யவுமே இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.
‘டிட்வா’ (Ditwah) சூறாவளி இலங்கையைக் கரையைத் தாக்கி தீவின் பல பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கடந்த 2025 நவம்பர் 29 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடு முழுவதும் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) 5 ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதியினால் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் படி, இந்தத் திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகள் “2026 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க அவசரகால (பல்வகைப் பண ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) ஒழுங்குவிதிகள்” என அழைக்கப்படும்.
