கம்பஹா: உடுகம்பொல பிரதேசத்தில் போக்குவரத்து கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து, அவர்களை வார்த்தைகளால் நிந்தித்து, சமூக ஊடகங்களில் பரவலாக வெளியான காணொளியில் காணப்பட்ட பெண், எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
குறித்த 46 வயதுடைய பெண், தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொய்யான DIG சகோதரி கூற்று
சமூக ஊடக காணொளியில், குறித்த பெண் ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரி எனத் தன்னைக் கூறிக்கொண்டு, பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளில் தலையிடுவது தெளிவாகக் காணப்பட்டது.
எனினும், குறித்த பெண் ஒரு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் (DIG) உறவினர் என்ற அவரது கூற்று முற்றிலும் பொய்யானது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெளிவாக அறிவித்துள்ளது.
