கொழும்பு: இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க, உலகப் புகழ்பெற்ற ‘குளோபல் ஃபைனான்ஸ்’ (Global Finance) சஞ்சிகையின் 2025ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியாளர் அறிக்கை அட்டையில், சிறந்த ‘A’ தர மதிப்பீட்டைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் மிக நெருக்கடியான காலப்பகுதியைக் கடந்துகொண்டிருந்த வேளையில், அதனை வழிநடத்தியமைக்காக, உலகின் தலைசிறந்த மத்திய வங்கி ஆளுநர்களில் ஒருவராக அவர் இதன்மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைதல், நாணய மாற்று விகித உறுதிப்பாடு மற்றும் வட்டி வீத முகாமைத்துவம் போன்ற விடயங்களில் வெளிப்படுத்திய சிறந்த செயல்திறனுக்காகவே இந்த ‘A’ தர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, வியட்நாம் உள்ளிட்ட ஒரு சில நாடுகளின் ஆளுநர்களே இம்முறை ‘A’ அல்லது ‘A+’ தரத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.