(வாஷிங்டன்) – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மற்றுமொரு நாட்டை தனது வரி விதிப்பு மிரட்டலுக்கு இலக்காக்கியுள்ளார். இம்முறை அவரது குறி கனடா நாட்டின் மீது திரும்பியுள்ளது. அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் கனடா நாட்டு விமானங்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
கடந்த ஓராண்டு காலமாகவே பல்வேறு நாடுகளுக்கு வரி விதிப்பு மிரட்டல்களை விடுத்து, அதன் மூலம் தனது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளும் உத்தியை ட்ரம்ப் கடைப்பிடித்து வருகிறார். தினமும் ஒரு நாட்டை மிரட்டுவது அவரது வாடிக்கையாகிவிட்டது.
ஏற்கனவே அமெரிக்கா மற்றும் கனடா அரசாங்கங்களுக்கு இடையே பல்வேறு விவகாரங்களில் வார்த்தைப் போர் முற்றியுள்ளது. குறிப்பாக, கனடாவும் சீனாவும் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டால், கனடா பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என கடந்த வாரம் ட்ரம்ப் மிரட்டியிருந்தார். தற்போது கனடா-சீனா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த புதிய மிரட்டல் வெளியாகியுள்ளது.
காரணம் என்ன?
ட்ரம்பின் இந்தத் திடீர் மிரட்டலுக்கு முக்கியக் காரணம், அமெரிக்க நிறுவனமான கல்ஃப்ஸ்ட்ரீம் (Gulfstream) தயாரிக்கும் அதிநவீன ஜெட் விமானங்களுக்கு கனடா சான்றிதழ் வழங்க மறுப்பதே ஆகும்.
இது குறித்து ட்ரம்ப் கூறுகையில், “உலகின் மிகச்சிறந்த மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட விமானங்களில் ஒன்றான கல்ஃப்ஸ்ட்ரீம் 500 மற்றும் 800 ஜெட் விமானங்களுக்கு கனடா தவறான முறையில், சட்டவிரோதமாக சான்றிதழ் வழங்க மறுத்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட்டிருக்க வேண்டிய இந்தச் சான்றிதழ் வழங்கப்படும் வரை, கனடாவின் குளோபல் எக்ஸ்பிரஸ் விமானங்கள் மற்றும் கனடாவில் தயாரிக்கப்பட்ட அனைத்து விமானங்களுக்கும் அமெரிக்கா வழங்கும் சான்றிதழை ரத்து செய்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த நிலைமையை உடனடியாகச் சரிசெய்யாவிட்டால், அமெரிக்காவிற்கு விற்கப்படும் கனடாவின் அனைத்து விமானங்களுக்கும் 50 சதவீத வரியை விதிக்கப் போகிறேன்,” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தற்போது அமெரிக்கா-மெக்சிகோ-கனடா முத்தரப்பு வர்த்தக ஒப்பந்தம் (USMCA) அமலில் இருப்பதால், கனடா பொருட்களுக்குப் பெரிய அளவில் வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால், கனடா அரசு அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க அமைச்சர் பெசன்ட், இதே நிலை தொடர்ந்தால் கனடா பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
ட்ரம்பின் இந்த அதிரடி அறிவிப்பு, அமெரிக்கா மற்றும் கனடா இடையேயான வர்த்தக உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
