கொழும்பு: “மிட்சுபிஷி ஆசிய சிறுவர் எனிக்கி ஃபெஸ்டா” சித்திர-நாட்குறிப்புப் போட்டியில் வெற்றி பெற்ற 300 இலங்கை மாணவர்களைக் கௌரவிக்கும் விருது வழங்கும் விழா, நேற்று (28) அலரி மாளிகையில் நடைபெற்றது. யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் தலைவரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மற்றும் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் இசோமாதா அகியோ ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், “கல்வியில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல், படைப்பாற்றலையும் வளர்க்கும் ஒரு கல்விக் முறைக்கு எமது அரசாங்கம் முழுமையாக அர்ப்பணித்துள்ளது,” என்றார். “எதிர்காலக் கல்விக் கொள்கைகளில், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அறிவுடன், கலை, கலாச்சாரம் மற்றும் தொழிற்கல்வித் திறன்களுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்படும்,” எனவும் அவர் உறுதியளித்தார்.
ஆசிய நாடுகளின் சிறுவர்களிடையே கலாச்சாரப் புரிதலையும், படைப்பாற்றலையும் வளர்ப்பதே இந்தப் போட்டியின் நோக்கமாகும். இலங்கையின் அபிவிருத்திக்கு ஜப்பான் வழங்கிவரும் உதவிகளுக்குப் பிரதமர் இதன்போது விசேட நன்றியைத் தெரிவித்தார். வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டிய ஜப்பானியத் தூதுவர், இப்போட்டி கலாச்சார விழுமியங்களைக் கற்றுக்கொள்ள உதவுவதாகவும் குறிப்பிட்டார்.