Headlines

கொழும்பு துறைமுகத்தில் மெகா போதைப்பொருள் வேட்டை; 463 கிலோ ‘ஐஸ்’ மீட்பு!

கொழும்பு துறைமுகத்தில் இன்று (31) நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில், இரண்டு கொள்கலன்களிலிருந்து சுமார் 463 கிலோகிராம் சந்தேகத்திற்கிடமான கிறிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் (Crystal Methamphetamine – ‘Ice’) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து, மத்திய குற்ற விசாரணைப் பிரிவின் (CCIB) அதிகாரிகள் இரண்டு பாக்கிஸ்தானிய பிரஜைகள் உட்பட மேலும் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு 8 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பிலுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவலின் பேரில், பொலிஸ் போதைப்பொருள் பணியகம் மற்றும் CCIB ஆகியவை இணைந்து இந்தச் சோதனையை நடத்தின.

இலங்கை சுங்கத் துறையின் உதவியுடன் சந்தேகத்திற்குரிய இரண்டு கொள்கலன்கள் பரிசோதிக்கப்பட்டுத் திறக்கப்பட்டன, அதைத் தொடர்ந்து அந்தப் போதைப்பொருள் மீட்கப்பட்டு எடைபோடப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குறித்த போதைப்பொருள் தொகையைக் கொள்கலன்களில் இருந்த துவாலைகளுக்குள் மறைத்து வைத்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதைக் கண்டறியவும், இந்த கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய மற்றவர்களை அடையாளம் காணவும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *