ஒரு மாத கால நோன்பு மற்றும் ஆன்மீக ஒழுக்கத்தை வெற்றிகரமாக முடித்து, ஈதுல் ஃபித்ர் பண்டிகையைக் கொண்டாடும் இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் மக்களுக்குப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை (21) வெளியிட்டுள்ள ஈதுல் ஃபித்ர் செய்தியில், றமழான் என்பது வெறும் நோன்பு நோற்பது மட்டுமல்ல, பொறுமை, தியாகம் மற்றும் பிறர் மீதான இரக்கம் போன்ற விழுமியங்களைப் போஷிக்கும் நேரமாகும் என்று அவர் வலியுறுத்தினார். குறிப்பாக இன்று, இந்த விழுமியங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மட்டுமல்லாது, தேசத்தின் மேம்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
“எமது நாட்டின் பன்முகத்தன்மை ஒரு பலமாகும். றமழான் போதிக்கும் சகோதரத்துவம் மற்றும் சகவாழ்வுச் செய்தி, இலங்கையர்களாகிய எங்களை ஒரே கொடியின் கீழ் ஒற்றுமையாக நிற்கத் தூண்டுகிறது. எமது நாட்டின் நிலையான அமைதி மற்றும் செழிப்பு என்பது, அனைத்து சமூகங்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையை வளர்த்து, மத மற்றும் கலாச்சார பிணைப்புகளை வலுப்படுத்துவதிலேயே தங்கியுள்ளது,” என்று அவர் கூறினார்.
உலகளாவிய கவலைகள் குறித்துப் பேசிய பிரதமர், றமழான் ஒற்றுமை உணர்வுடன் கொண்டாடப்படும் வேளையில், உலகம் முழுவதும் மோதல்களால் பாதிக்கப்படுபவர்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
“குறிப்பாக, மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் துரதிர்ஷ்டவசமான மோதல்களுக்கு மத்தியில், முஸ்லிம் சமூகங்கள் உட்பட மக்கள் எதிர்கொள்ளும் மிகவும் கடினமான மற்றும் வேதனையான சூழ்நிலைகள் குறித்து எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கிறோம்,” என்று பிரதமர் கூறினார்.
மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விழுமியங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இக்காலத்தில், போரின் கொடூரங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதும், அந்தப் பிராந்தியங்களில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு உழைப்பதும் சர்வதேச சமூகத்தின் பொறுப்பும் கூட்டு நம்பிக்கையும் ஆகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த உலகளாவிய சவால்களுக்கு மத்தியில், சகோதரத்துவ உணர்வுடன் ஒன்றிணைந்து நிற்பதும், ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதும் சமூக ஸ்திரத்தன்மைக்கு வலுவான அடித்தளமாக அமைகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். றமழான் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஆன்மீக ஒழுக்கம், தற்போதைய சவால்களை முறியடித்து, செழிப்பான தேசமாக முன்னோக்கிச் செல்வதில் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பெரிய பலமாக இருக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தானதர்மத்தின் (சக்காத்) முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், “கொடுக்கும் செயல்களின் மூலம் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த உன்னத நாளில், இரக்கமும் ஒத்துழைப்பும் கொண்ட இலங்கையை கட்டியெழுப்புவதில் அனைவரும் உறுதிகொள்ள வேண்டும். இந்த றமழான் பண்டிகை அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு நிறைந்த வாழ்க்கையின் தொடக்கமாக அமையட்டும்.”
“உங்களுக்கு மகிழ்ச்சியான ஈதுல் ஃபித்ர் வாழ்த்துக்கள்!” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
