மருத்துவர்களின் சட்டவிரோத இடமாற்றங்கள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் (GMOA) இன்று (31) காலை 8 மணி முதல் நாடு தழுவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாஸ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை, விசேட சிறுநீரகப் பிரிவுகள், முப்படையினரின் வைத்தியசாலைகள் மற்றும் தேசிய மனநல நிறுவனம் ஆகியவற்றில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என அவர் மேலும் தெளிவுபடுத்தினார். தங்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய பதிலை வழங்கத் தவறினால், எதிர்காலத்தில் மிகவும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகவும் வைத்தியர் சுகததாஸ எச்சரித்துள்ளார்.
சுகாதாரப் பிரதி அமைச்சரின் கருத்து
இதற்கிடையில், மருத்துவர்களின் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பில் சுகாதாரப் பிரதி அமைச்சர் ஹம்சக விஜேமுனி அண்மையில் கருத்துத் தெரிவிக்கையில்,
“மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடியும் என நான் நினைக்கவில்லை. வரலாற்று ரீதியாக, இவ்வாறான நடவடிக்கைகள் பெரிய அளவில் இடம்பெற்றதில்லை. குறிப்பாக, இந்த தொழிற்சங்கத்திற்கு இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் திறன் இருப்பதாக நான் கருதவில்லை. அண்மையில் பல்வேறு அறிக்கைகள் வெளியிடப்பட்ட போதிலும், குறிப்பிடத்தக்க எந்த சம்பவமும் நிகழவில்லை. எவ்வாறாயினும், மருத்துவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அதற்கு செவிசாய்க்க நாங்கள் தயாராக உள்ளோம்,” எனத் தெரிவித்திருந்தார்.
