Headlines

டிட்வா சூறாவளி பாதிப்பு: நஷ்டஈடு வழங்கும் பணிகளைத் துரிதப்படுத்த பிரதமர் ஹரிணி அமரசூரிய பணிப்புரை!

‘டிட்வா’ (Ditwah) சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் பணிகளை உடனடியாகத் துரிதப்படுத்துமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரதமரின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற “இலங்கையை மீளக் கட்டியெழுப்புதல்” ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தின் போதே இந்த விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், “இலங்கையை மீளக் கட்டியெழுப்புதல்” வேலைத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த வீடுகளைப் புனரமைத்தல் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை எவ்வித தாமதமுமின்றி, முறையான முறையில் முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார். அத்துடன், ஜனாதிபதி செயலணியின் கீழ் நிறுவப்பட்ட பிரதான குழுக்கள் மற்றும் உப குழுக்களின் முன்னேற்றங்களும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டன.

புதிய வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதப்படுத்துவதற்காக அனைத்து மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் விசேட கலந்துரையாடலொன்றை விரைவில் நடத்துவதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, ‘டிட்வா’ சூறாவளி தொடர்பான அனர்த்தத்திற்குப் பின்னரான தேவைகள் மதிப்பீட்டு (PDNA) அறிக்கை, பாதுகாப்புப் பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவினால் உத்தியோகபூர்வமாகப் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் அமைச்சர்களான விமல் ரத்நாயக்க, கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, கலாநிதி உபாலி பன்னிலகே, சுசில் ரணசிங்க, பாதுகாப்புப் பிரதியமைச்சர் அருண ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்ட பல அரச சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *