டிட்வா (Ditwah) சூறாவளியினால் சேதமடைந்த மத வழிபாட்டுத் தலங்களை விரைவாகப் புனரமைத்து, அவற்றை மீண்டும் வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக மக்களிடம் கையளிக்கும் நோக்கில் விசேட தேசிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
“கட்டியெழுப்புவோம் – அதிஷ்டானயே சந்ஹிந்த” (Godanagamu Adhishtanaye Sanhinda) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று (27) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் சேதம்
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மத, கலாசார மற்றும் தொல்பொருள் இடங்கள் சேதமடைந்துள்ளன. இந்த இடங்களின் வரலாற்று மற்றும் கலாசாரப் பெறுமதியைப் பாதுகாக்கும் வகையில், அவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கான உடனடி புனரமைப்புப் பணிகளை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் ஒருங்கிணைக்கப்படும் இந்த வேலைத்திட்டம், இன்று காலை 10.00 மணிக்கு கம்பளை, தொரகல பீக்காக் ஹில் ஸ்ரீ போதிருக்காராம விகாரையிலும், பிற்பகல் 3.00 மணிக்கு மாத்தளை கவடயமுன புராண ராஜமஹா விகாரையிலும் ஆரம்பமாகவுள்ளது.
மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதத் தலைவர்களின் ஆலோசனைகளுடனும், அனைத்து தரப்பினரின் பங்களிப்புடனும் இந்த புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
