கொழும்பு, டிசம்பர் 04: ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட முழு மற்றும் பகுதியளவு சேதமடைந்த வீடுகளைச் சரியான முறையியலின் படி அடையாளம் காணவும், இழப்பீட்டிற்குத் தேவையான சரியான தரவுகளைத் திறம்படப் பெறுவதற்கான ஒரு சிறப்புத் தொழில்நுட்பத்தைத் தயாரிக்கவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (04) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
புயலால் சேதமடைந்த வீடுகளை விசாரிப்பதற்கும் அது தொடர்பான இழப்பீட்டுச் செயல்முறைக்கும் இந்த கலந்துரையாடல் அழைக்கப்பட்டது.
அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இதுபோன்ற ஒரு அனர்த்தத்தில் இருந்து மீள முடியாதவாறு நீண்ட காலத் தீர்வொன்றை வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்கான சரியான தரவுகளை அடையாளம் காணுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதன்படி, மண்சரிவு காரணமாக 1,289 வீடுகள் முழுமையாகவும், 44,574 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, திறைசேரி செயலாளர் கே.எம்.மஹிந்த சிறிவர்தன உள்ளிட்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
