தலங்கம, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் நேற்று (21) சனிக்கிழமை கைது செய்யப்பட்ட முக்கிய துப்பாக்கிதாரி குறித்து பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணைகளின்படி, சந்தேகநபர் 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தின் போது இராணுவத்திலிருந்து சட்டரீதியாக வெளியேறிய முன்னாள் இராணுவ வீரர் ஆவார்.
சம்பவத்தின் பின்னணி:
கடந்த 2026 பெப்ரவரி 13 ஆம் திகதி அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் ஆரம்பித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் பெப்ரவரி 16 ஆம் திகதி கொட்டாவ மற்றும் அத்துருகிரிய பொலிஸ் பிரிவுகளில் மூன்று சந்தேகநபர்களும், பெப்ரவரி 17 ஆம் திகதி கஹத்துடுவ பொலிஸ் பிரிவில் மற்றொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டனர்.
துப்பாக்கிதாரி கைது:
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவும், ஹோமாகம பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட விரிவான விசாரணைகளைத் தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய பிரதான துப்பாக்கிதாரி நேற்று (21) அம்பலாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்துவ (Delduwa) பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட போது சந்தேகநபரிடம் இருந்த, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் கையடக்கத் தொலைபேசி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் இன்று (22) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினா் மேற்கொண்டு வருகின்றனர்.
