(மும்பை) – “தும் ஹி ஹோ” (Tum Hi Ho), “கேசரியா” (Kesariya), “சன்னா மேரேயா” (Channa Mereya) போன்ற தனது ஆத்மார்த்தமான குரலால் பல தலைமுறைகளைக் கவர்ந்த பிரபல பாலிவுட் பாடகர் அர்ஜித் சிங், இனி புதிய பின்னணிப் பாடல் (Playback Singing) வாய்ப்புகளை ஏற்கப் போவதில்லை என்று அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், இத்தனை ஆண்டுகளாகத் தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “இனி நான் புதிய பின்னணிப் பாடல் வாய்ப்புகளை ஏற்கப் போவதில்லை. இந்தப் பயணத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இது ஒரு அற்புதமான பயணம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திடீர் அறிவிப்பு ரசிகர்களைக் கவலையடையச் செய்த நிலையில், தனது தனிப்பட்ட ‘X’ (ட்விட்டர்) தளத்தில் இதற்கான காரணங்களை அவர் விளக்கியுள்ளார். “இதற்கு ஒரு காரணம் மட்டுமல்ல, பல காரணங்கள் உள்ளன. நீண்ட காலமாகவே இதைச் செய்ய முயன்று வந்தேன். இப்போதுதான் அதற்கான சரியான தைரியம் வந்துள்ளது,” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “நான் ஒரே மாதிரியான விடயங்களைச் செய்வதில் விரைவில் சலிப்படைந்து விடுகிறேன். எனக்குச் சலிப்பு ஏற்பட்டுவிட்டது. வாழ்வதற்கு வேறு வகையான இசையை நான் செய்ய வேண்டும்,” என்றார். மேலும், புதிய குரல்கள் வெளிவருவதைக் கேட்கத் தான் ஆவலாக இருப்பதாகவும், அவை தனக்கு உண்மையான ஊக்கத்தை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, தான் இசையை விட்டு முழுமையாக விலகவில்லை என்பதை உறுதிப்படுத்திய அர்ஜித் சிங், தனது அடுத்த கட்டம் குறித்துப் பேசுகையில், “நான் மீண்டும் இந்தியப் பாரம்பரிய இசைக்கே (Indian classical music) திரும்பப் போகிறேன். நான் மீண்டும் இசையை உருவாக்க விரும்புகிறேன். ஒரு சிறிய கலைஞனாக மீண்டும் புதிதாகத் தொடங்க விரும்புகிறேன்,” என்று தெரிவித்தார்.
ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிலுவையில் உள்ள பணிகளை முடித்துக் கொடுக்கவுள்ளதாகவும், அதனால் இந்த ஆண்டும் அவரது சில புதிய பாடல்கள் வெளியாகலாம் என்றும் அவர் ரசிகர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு “ஆஷிகி 2” படத்தின் “தும் ஹி ஹோ” பாடல் மூலம் உச்சம் தொட்ட அர்ஜித் சிங், கடந்த ஒரு தசாப்த காலமாக பாலிவுட் இசையுலகில் அசைக்க முடியாத இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
