ஐக்கிய இராச்சியத்தின் (பிரித்தானியா) துணைப் பிரதமர் டேவிட் லாமி (David Lammy) இன்று (17) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயமானது ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கைக்கு இடையிலான பங்காளித்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன், ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய இராச்சியம் வழங்கும் மனிதாபிமான உதவிகளையும் துணைப் பிரதமர் பார்வையிடவுள்ளார்.
தனது இந்த விஜயத்தின் போது, துணைப் பிரதமர் டேவிட் லாமி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில், பொருளாதார ஒத்துழைப்பு, நல்லிணக்கம், மனிதாபிமான முன்னுரிமைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தம் தொடர்பான பூகோள சாசனத்தில் (Global Charter on Children’s Care Reform) இலங்கையின் ஈடுபாடு ஆகிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது. (குடும்ப அடிப்படையிலான பராமரிப்பை வலுப்படுத்துதல் மற்றும் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான பூகோள முயற்சியே இந்த சாசனமாகும்).
மேலும், கடந்த வருட இறுதியில் நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு, ஐக்கிய இராச்சியத்தின் ஆதரவை வழங்கும் மனிதாபிமான உதவிப் பங்காளார்களுடனும் துணைப் பிரதமர் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.
