புதிய பொலிவுடன் புனரமைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம், பொதுமக்களின் பாவனைக்காக இன்று (08) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்புத் திறப்பு விழாவில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் விமல் ரத்நாயக்க, பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன், அரசாங்கத்தின் ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் இந்தப் புனரமைப்புப் பணிகள் மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டப் பணிகளாக, பேருந்து நிலையத்தின் முனையக் கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன், புதிய தகவல் மையம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. மேலும், மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் மற்றும் தூய்மையான சுற்றுப்புறச் சூழல் ஆகியன உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் புனரமைப்புப் பணிகளுக்கு இலங்கை விமானப்படையினர் தமது மனிதவளப் பங்களிப்பை முழுமையாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கோட்டை ரயில் நிலையப் பணிகள் நாளை ஆரம்பம்
இதற்கிடையில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் நாளை (09) ஆரம்பமாகவுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் கூட்டு நிதியுதவியுடன், சுமார் 2.1 பில்லியன் ரூபா முதலீட்டில் இந்தப் பிரம்மாண்ட திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் புனரமைப்புப் பணிகளை எதிர்வரும் 15 மாதங்களுக்குள் முழுமையாக நிறைவு செய்து மக்கள் பாவனைக்குக் கையளிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
