புத்தளம்: புத்தளம் பொலிஸாரின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நேற்று (01) மேற்கொண்ட அதிரடிச் சோதனையின் போது, 524 கிராம் கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் (பொதுவாக ‘ஐஸ்’ என அழைக்கப்படும்) போதைப்பொருளுடன் திருமணமான தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 மற்றும் 23 வயதுடைய கணவன், மனைவி எனவும், அவர்கள் ஆனைமடுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் புத்தளம், மல்லங்குளம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ‘ஐஸ்’ போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 80 இலட்சம் (8 மில்லியன்) ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
புத்தளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இளைஞர்களுக்கு இந்தத் தம்பதியினர் போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மாத காலமாக இவர்களைக் கண்காணித்து வந்த பொலிஸார், போதைப்பொருளைக் கடத்திச் சென்றபோது இடைமறித்துக் கைது செய்துள்ளனர்.
விசாரணைகளில், இவர்கள் இப்பாகமுவ பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்து இந்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் மோட்டார் வாகனம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தத் தம்பதியினருக்கு வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நேரடித் தொடர்புகள் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இவர்களைத் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
