Headlines

மகாவலி ஆற்றுப் படுக்கையை அண்டிய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை! – நீர்ப்பாசனத் திணைக்களம்!

கொழும்பு, நவம்பர் 26: மகாவலி ஆற்றுப் படுக்கையைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திணைக்களத்தின் தகவலின்படி, நேற்று இரவு முதல் சில மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கணிசமான மழையினால் மகாவலி ஆற்றங்கரையோரத்தில் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.

கிண்ணியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிக்கந்த, மெதிரிகிரிய, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள் அபாயத்தில் உள்ளன.

மட்டக்களப்பு-பொலன்னறுவை வீதியின் சில பகுதிகள் (குறிப்பாக கல்லெல பகுதி), சோமவதிய ரஜ மகா விகாரைக்கான அணுகு வீதி மற்றும் விகாரையைச் சுற்றியுள்ள பகுதிகள் நீரில் மூழ்கக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, சோமவதிய ரஜ மகா விகாரைக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள பக்தர்கள், மறு அறிவித்தல் வரும் வரை அடுத்த சில நாட்களுக்கு அப்பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேற்கூறிய பகுதிகளில் மகாவலி ஆற்றை அண்மித்து வசிப்பவர்கள் அதிக விழிப்புடன் இருக்குமாறும், வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உரிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தகுந்த தயார்நிலை மற்றும் பதிலளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *