Headlines

மத்திய கிழக்கு அமைதிக்கு இலங்கையின் முழுமையான ஆதரவு: அரபு நாட்டுத் தூதுவர்களிடம் ஜனாதிபதி அநுர உறுதி!

மத்திய கிழக்கில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக, சர்வதேச சட்டக் கட்டமைப்பிற்கு உட்பட்டு, ஒரு தனி நாடாகவும் மற்ற நாடுகளுடன் இணைந்தும் இலங்கை தனது உச்சக்கட்ட ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கான அரபு நாடுகளின் தூதுவர்கள் சபைக்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (08) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, மத்திய கிழக்கில் தற்போது நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் அரபு நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து தூதுவர்கள் ஜனாதிபதிக்கு விரிவாக விளக்கமளித்தனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் விரைவில் அமைதி திரும்பும் என இலங்கை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மோதலில் நேரடியாகத் தொடர்புபடாத நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்துத் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். அத்துடன், இத்தகைய தாக்குதல்களை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இலங்கையின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்தல், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குதல் மற்றும் சுற்றுலாத் துறைக்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட விடயங்களில் மத்திய கிழக்கு நாடுகள் வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். மேலும், தற்போதைய மோதல் நிலைமைகளுக்கு மத்தியிலும், அங்கு பணிபுரியும் ஏராளமான இலங்யைர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரபு நாடுகள் காட்டும் விசேட கவனத்திற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இந்த முக்கிய சந்திப்பில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவரும் அரபு தூதுவர்கள் சபையின் தலைவருமான காலித் நாசர் சுலைமான் அல் அமேரி, சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்கஹ்தானி, ஓமான் தூதுவர் அஹ்மத் அலி சயீத் அல் ரஷ்தி, எகிப்து தூதுவர் அடெல் இப்ராஹிம், பலஸ்தீனத் தூதுவர் இஹாப் ஐ.எம். கலீல், கத்தார் தூதுவர் ஹமத் முகமது அப்துல்லா அல்-சனத் அல்-தோசாரி, மற்றும் ஈராக், குவைத், லிபியா ஆகிய நாடுகளின் இராஜதந்திரப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *