Headlines

“மாற்றம் அவசியம், இல்லையேல் கிரிக்கெட் உலகில் தனித்து விடப்படுவோம்” – நியூசிலாந்திடம் தோல்வி குறித்து சங்கக்கார எச்சரிக்கை!

கொழும்பு, பிப். 26: நேற்று (25) நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார தனது கவலையையும், அணிக்குத் தேவையான மாற்றங்கள் குறித்தும் முக்கிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அணியை சரியான பாதையில் கொண்டு செல்ல அனைத்து மட்டங்களிலும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன என்று வலியுறுத்தியுள்ளார்.

“மாற்றங்களுக்கு ஏற்ப நாம் மாறவில்லை”:

“நம்மைச் சுற்றியுள்ள கிரிக்கெட் உலகம் மிக வேகமாக வளர்ச்சியடைந்துள்ள நிலையில், நாம் ஒரே விடயங்களை மீண்டும் மீண்டும் செய்துகொண்டு வேறுபட்ட முடிவுகளை எதிர்பார்க்க முடியாது,” என்று சங்கக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

“நாம் இந்த மாற்றங்களுக்கு ஏற்ப இசைவாக்கம் அடையவில்லை. இது இப்படியே தொடர்ந்தால், கிரிக்கெட் உலகில் நாம் முக்கியத்துவமற்றவர்களாக அல்லது தொடர்பற்ற நிலைக்கு (irrelevance) தள்ளப்படும் அபாயம் உள்ளது,” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ரசிகர்கள் மற்றும் வீரர்களின் வேதனை:

இந்தத் தோல்வியால் அனைவரும் பெரும் வேதனையில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “ரசிகர்கள் பேரழிவிற்கும், ஏமாற்றத்திற்கும், கோபத்திற்கும் உள்ளாகியுள்ளனர். வீரர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நானும் இதுபோன்ற சூழ்நிலைகளில் ஆடை மாற்றும் அறையில் இருந்திருக்கிறேன். அது அவ்வளவு எளிதானது அல்ல,” என்று வீரர்களின் மனநிலையையும் பகிர்ந்துகொண்டார்.

“நாட்டையும் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு பெரிய பாக்கியம் மட்டுமல்ல, அது ஒரு பெரும் பொறுப்பும் சுமையுமாகும்,” என்றும் சங்கக்கார தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *